CONTACT US

Tuesday, August 31, 2010

ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும். 

இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத்தான் தானம் என்கிறோம்.

ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.

எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று அதனை பாதுகாத்து, ரத்தம் தேவைப்படும்போது அதனை அவர்களுக்குக் கொடுத்து உதவும் ஒரு அமைப்புதான் ரத்த வங்கியாகும்.

ரத்தம் என்பது என்ன?

ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.

ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.

ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் ரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. ரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.

ரத்தத்தின் வகைகள்

ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.

அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் ஏ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை ரத்தத்திற்கும் பொருந்தும்.

ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் அளிக்கலாம்



ரத்த வங்கிகளின் வேலை

ரத்தத்தை தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை முழுமையான பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.

அதாவது, எய்ட்ஸ், பால்வினை நோய், மலேசியா, மஞ்சள் காமாலை போன்று ஏதாவது நோய் தாக்கியிருப்பவரின் ரத்தமா என்பது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் அவை சுத்தமானது என்று தெரியவந்த பிறகுதான் ர‌த்த வங்கியின் பாதுகாப்பு முறைக்கு தயார் ஆகிறது.

ரத்த பாதுகாப்புக்கான முறைகள் கையாளப்பட்டு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.

இதுபோன்று தானமாக பெறப்பட்ட ரத்தம் சுமார் 35 நாட்கள் வரை பாதுகாக்கப்படும். அதற்குள் பெறப்பட்ட ரத்தத்தை பயன்படுத்திவிடுவது நல்லது.

தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியேப் பிரித்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது.

அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கலாம்.

ரத்த வங்கிகள் தாங்கள் பெறும் ரத்தத்தில் 85 விழுக்காடு ரத்தத்தை இப்படி பிரித்துத்தான் பாதுகாக்கின்றன. 

ஏனெனில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படாது. உதாரணத்திற்கு, ஹ்யூமோக்ளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மா செல்கள் மட்டுமேத் தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமேத் தேவைப்படும்.

அந்த சமயங்களில் நோயாளிக்குத் தேவையான ரத்தத்தில் இருந்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும் செல்கள் மட்டும் அவர்களுக்கு அளிக்கப்படும்.

எனவே ஒருவர் அளிக்கும் ரத்தத்தின் மூலமாக பலர் பயனடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 

ரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது ரத்தம் செலுத்த நினைத்தாலோ, பாரத் பிளட் பேங்க், இந்தியன் பிளட் டோனர்ஸ், பிளட் கிவ்வர்ஸ், ஜீவன், பிளட் டெனேஷன், ஆப், ரெட் கிராஸ், ரோட்டரி பிளட் பேங்க் ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை நாடலாம்.

இந்தியாவில் மொத்தமாக 2,800 ரத்த வங்கிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அதில், மஹாராஷ்டிராவில் 270 ரத்த வங்கிகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 320 ரத்த வங்கிகள் செயல்படுகின்றன.


.

No comments: